மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு

விழுப்புரம் அருகே மளிகை கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-17 17:59 GMT

விழுப்புரம், 

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் குமாரகுப்பம் நரையூர் சாலையை சேர்ந்தவர் சண்முகம் மகன் சந்தோஷ் (வயது 43). இவர் நரையூர் சாலையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை சந்தோஷ், தனது கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் முன்பக்க இரும்புக்கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே கடைக்குள் சென்று பார்த்தபோது அங்கு கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கம் மற்றும் மறு விற்பனைக்காக வைத்திருந்த 6 செல்போன்கள் ஆகியவை திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து சந்தோஷ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு பணம், செல்போன்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்