சீர்காழி
சீர்காழி அருகே சட்டநாதபுரம் உப்பனாறு பாலம் அருகே நேற்று மாலை தனியார் பஸ் ஒன்று மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது சீர்காழி கோவிலான் தெருவை சேர்ந்த தொழிலாளி செந்தில்குமார் (வயது 35) என்பவர் ஸ்கூட்டரில் பஸ்சின் பின்னால் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர், பஸ்சை முந்திச் செல்ல முயன்றபோது நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். அவரது தலையில் பஸ்சின் பின்புற சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே, பஸ்சை நிறுத்தி விட்டு அதன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்தில்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக சீர்காழி-மயிலாடுதுறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.