குமரியில் இருந்து சட்டசபை குழுவிற்கு 238 மனுக்கள் வந்துள்ளன அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தகவல்
குமரி மாவட்டத்தில் இருந்து சட்டசபை மனுக்கள் குழுவிற்கு இதுவரை 238 மனுக்கள் வந்துள்ளன என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கூறினார்.
நாகா்கோவில்,
குமரி மாவட்டத்தில் இருந்து சட்டசபை மனுக்கள் குழுவிற்கு இதுவரை 238 மனுக்கள் வந்துள்ளன என்று அரசு தலைமை கொறடா கோவி.செழியன் கூறினார்.
சட்டசபை மனுக்கள் குழு
தமிழக சட்டசபை மனுக்கள் குழுத்தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் தலைமையில் சட்டசபை செயலாளர் சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் கிரி, சந்திரன், பிரபாகரராஜா, சங்கர், மாங்குடி, அமுல் கந்தசாமி, கோவிந்தசாமி, செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். பின்னர் கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் பால்குளம் அரசு குடிசைமாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வரும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றனர்.
தேரூர் கிராமத்தில் இருந்து புதுகிராமம் மற்றும் கோதைகிராமம் வழியாக செல்லும் தார்சாலையை பார்வையிட்டனர். சுசீந்திரம் மேலசங்கரன்குழி நரிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் தமிழக சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் கோவி.செழியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மனுக்களுக்கு தீர்வு
குமரி மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்டர் மூலம் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது. தீர்வு காணப்படாத மனுக்கள் மீது தற்போது 10 இடங்களுக்கும் மேலாக ஆய்வு செய்து உள்ளாம். தற்போது நடந்துள்ள ஆய்வின்போது கன்னியாகுமரி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. கோரிக்கைகளை முன் வைத்து மனு அளித்துள்ளார். இதே போல் ஊராட்சி மன்ற தலைவரும் மனு அளித்துள்ளார். அதில் குடிநீர் பிரச்சினை தீர்வு காண வேண்டும், சாலைகளை சீரமைக்க வேண்டும், குளங்களை தூர்வார வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (அதாவது இன்று) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் இந்த பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
குமரி மாவட்டத்தில் இருந்து சட்டசபை மனுக்கள் குழுவிற்கு இதுவரை 238 மனுக்கள் வந்துள்ளன. இதில் 120 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி தற்போது ஆய்வின் போது பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். குமரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையின் போது ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளது. அதை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். இதுதொடர்பாக கலெக்டரிடம் ஆலோசித்து பொதுப்பணித்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சீரமைப்பு பணிகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பல்வேறு கோரிக்கைகள்
இதைத் தொடர்ந்து, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மனுதாரரிடம் சட்டசபை மனுக்கள் குழுத்தலைவர் கோவி.செழியன் கூறினார்.
ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், பிரின்ஸ், எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் ஆஷா அஜித், துணை மேயர் மேரி பிரின்சி லதா, சட்டப்பேரவை இணை செயலாளர் சாந்தி, கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், அரசு வக்கீல் மதியழகன் உள்பட பலர் உடனிருந்தனர்.