கன்னியாகுமரியில் 4 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 24,500 பேர் பார்த்தனர்

கன்னியாகுமரியில் 4 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 24,500 பேர் பார்த்தனர்.

Update: 2022-05-17 17:30 GMT
கன்னியாகுமரி, 
கன்னியாகுமரியில் 4 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்தை 24,500 பேர் பார்த்தனர்.
விவேகானந்தர் மண்டபம்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.
பின்னர் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரியில் கடந்த 14, 15, 16 மற்றும் 17-ந்தேதி ஆகிய 4 நாட்களில் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை 24 ஆயிரத்து 500 பேர் படகில் சென்று பார்த்தனர்.
படகு போக்குவரத்து தாமதம்
14-ந் தேதி 8 ஆயிரத்து 400 பயணிகளும், 15-ந் தேதி  6 ஆயிரம் பயணிகளும், 16-ந் தேதி 4 ஆயிரத்து 700 பயணிகளும், நேற்று 5 ஆயிரத்து 400 பயணிகளும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக கடல் சீற்றம் மற்றும் நீர்மட்டம் தாழ்வு காரணமாக படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கி வந்தது. அதே போல் 3-வது நாளாக நேற்று காலையில் திடீரென கடலில் நீர்மட்டம் தாழ்ந்தது. இதனால், காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கவில்லை. பின்னர், 10 மணியளவில் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணிநேரம் தாமதமாக படகு போக்குவரத்து தொடங்கியது. 

மேலும் செய்திகள்