கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா
கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
இதில் முன்னாள் மாநில துணைத்தலைவர் கணேசன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கோரிக்கைகள்
மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ செலவை திரும்பப்பெற அளிக்கப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மனுக்கள் மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட எம்பவர் கமிட்டியில் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி ஒருவரை இடம்பெற செய்ய வேண்டும்.
தி.மு.க. தோ்தல் வாக்குறுதிப்படி, தமிழக அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 80-ல் இருந்து 70-ஆக குறைத்திட வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம்
சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும். 1.4.2003 முதல் பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.
இதில், மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் நன்றி கூறினார்.