தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பயனற்ற சேவை மைய கட்டிடம்
கரூர் மாவட்டம் நன்செய் புகழூர் ஊராட்சி தவுட்டுப்பாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் செலவில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்தக் கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேவை மைய கட்டிடத்தை திறந்து வைத்து விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு பல்வேறு ஆவணங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விஜயகுமார், தவுட்டுப்பாளையம், கரூர்.
குறுகிய பாலம் அகலப்படுத்தப்படுமா?
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள முனிநாதபுரத்தில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி புகழூர் கால்வாயின் குறுக்கே நடந்தும், இருசக்கர வாகனத்திலும் செல்லும் வகையில் சிறிய குறுகிய பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக பொதுமக்கள் காவிரி ஆற்றிற்கும், பக்தர்கள் காவிரி ஆற்றின் அருகே உள்ள பிரசித்தி பெற்ற முனியப்பசாமி கோவிலுக்கும் சென்று வருகின்றனர். அதேபோல் விவசாயிகள் இருசக்கர வாகனத்தில் இடுபொருட்களையும், விளை பொருட்களையும் கொண்டு செல்கின்றனர். குறுகிய பாலமாக இருப்பதால் இந்த பாலத்தின் வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், முனிநாதபுரம், கரூர்.