ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

சிதம்பரத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்

Update: 2022-05-17 16:53 GMT
சிதம்பரம், 

கேரளாவில் கடந்த மாதம் ஒரு கடையில் ‘ஷவர்மா’ சாப்பிட்ட பிளஸ்-1 மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த கடையில் ஷவர்மா சாப்பிட்ட பலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் ‘ஷவர்மா’ கடைகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.  அதன்படி  மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ்குமார் உத்தரவின்பேரில்,  நேற்று சிதம்பரம் நகர பகுதி, 4 முக்கிய வீதிகளில் உள்ள ஓட்டல்களில்   சிதம்பரம் உணவு பாதுகாப்பு அதிகாரி அருள்மொழி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

எச்சரிக்கை

இதில் 20-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் தரமில்லாத ஆயில், மீன், பால், நெய் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், மாதிரியை சேகரித்து, நடமாடும் பரிசோதனை வாகனத்தில் வைத்து அவர்கள் சோதனை மேற்கொண்டனர். 
அப்போது தரமில்லாத உணவு பொருட்கள், காலாவதியான பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டல் உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். 
மேலும், சிதம்பரம் வடக்கு மெயின் ரோடு மீன் மார்க்கெட்டிலும் ஆய்வு செய்தனர். அதில்,  பெண் ஒருவர் மீன்கள் வீணாகிவிடமால் இருக்க மீன்கள் மீது ரசாயனத்தை பயன்படுத்தியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த பெண்ணை அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். 
இதேபோல், சிதம்பரம் கீழ வீதி பகுதியில் ஐஸ்கிரீம் கடைகள், கொத்தவால் தெருவில் ஆயில் கடைகள், மேலவீதியில் பால், தயிர் விற்பனை நிலையத்திலும் ஆய்வு கொண்டார்கள்.

மேலும் செய்திகள்