துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வார்டுகளில் குப்பை தேங்கும் நிலை
திருப்பூர் 2-வது மண்டலத்தில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வார்டுகளில் குப்பை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கலந்தாய்வு கூட்டத்தில் கவுன்சிலர்கள் முறையீடு செய்தனர்.
அனுப்பர்பாளையம்
திருப்பூர் 2-வது மண்டலத்தில் துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையால் வார்டுகளில் குப்பை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கலந்தாய்வு கூட்டத்தில் கவுன்சிலர்கள் முறையீடு செய்தனர்.
கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பா நகரில் உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. 2-வது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் கண்ணன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:-
கவிதா விஜயகுமார் (அ.தி.மு.க.):-
துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை
7-வது வார்டுக்குட்பட்ட குருவாயூரப்பன்நகரில் சாலைப்பணிகளை துரிதப்படுத்துவதுடன், சக்திநகரில் கல்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. பழுதான தெருவிளக்குகளை சரி செய்ய வேண்டும். செழியன் (த.மா.கா.):- 17-வது வார்டில் குப்பை மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன், கூடுதல் பேட்டரி வாகனங்கள் வழங்க வேண்டும்.
தமிழ்செல்வி கனகராஜ் (அ.தி.மு.க.):-
16-வது வார்டுக்கு தேவையான 45 துப்புரவு பணியாளர்களில் தற்போது 15 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் வார்டு பகுதிகளில் குப்பை தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதியில் நிற்கும் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிப்பதுடன், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிக்காக மாற்றுப்பாதை அமைக்க வேண்டும்.
எஸ்.எம்.எஸ்.துரை(அ.தி.மு.க.):-
4-வது வார்டில் சப்பை தண்ணீர் மற்றும் குப்பை பிரச்சினை பிரதானமாக உள்ளது.
புஷ்பலதா தங்கவேலன் (அ.தி.மு.க.)்:-
30-வது வார்டு பகுதியில் 4-வது குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் பேசியதாவது:-
குப்பை பிரச்சினைக்கு தீர்வு
2-வது மண்டலத்தில் பெரும்பாலான கவுன்சிலர்களின் கோரிக்கையான குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தேவையான அளவு துப்புரவு பணியாளர்களை வழங்குமாறு மேயர் தினேஷ்குமாரிடம் வலியுறுத்தி உள்ளோம். அவரும் அதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்து தருவதாக உறுதி அளித்துள்ளதால், குப்பை பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும்.
மேலும் ஒரு வார்டுக்கு 4 பேட்டரி வாகனங்கள் வழங்கவும் முடிவு செய்துள்ளோம். வார்டுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் தேங்கி காணப்படும் மணலை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் சந்திரசேகர், ரவி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.