நூல் விலை உயர்வுக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி

நூல் விலை உயர்வுக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

Update: 2022-05-17 16:34 GMT
காவேரிப்பாக்கம்

நூல் விலை உயர்வுக்கும், தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

அமைச்சர் காந்தி ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு செய்தார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில் தேசிய தரச்சான்றிதழ் குழுவினர் ஆய்வு செய்தது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் தேசிய தரசான்றித் பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்தார்.

 முன்னதாக ராணிப்பேட்டை காரை பகுதியை சேர்ந்த விவேக், கனிமொழி தம்பதியினருக்கு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அவர்கள் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட கேட்டுக்கொண்டதன்பேரில் அன்பழகன் என பெயர் சூட்டினார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் நோயாளிகளிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் காந்தி பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சம்பந்தம் இல்லை

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வுக்கும், தமிழக அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விலையை குறைப்பதற்கு தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. பருத்தி உற்பத்தி செய்யும் விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் முன் தொகையை கொடுத்துவிட்டு பருத்தியை வாங்கி பதுக்கி வைப்பதாலும் பருத்தி விலை உயர்வதாக தெரிவித்தார். 

தமிழகத்தில் பருத்தி பதுக்கல் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் கோயம்புத்தூரில் உள்ள பருத்தி ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டபோது பருத்தி இறக்குமதி வரியை 11 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனை மத்திய அரசிடம் தெரிவித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் லட்சுமணன், நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, ஒன்றிக்குழு தலைவர் வெங்கட்ரமணன், நகர செயலாளர் தில்லை, வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் உஷா நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்