தந்தையை கொலை செய்த மகன் கைது
அவினாசி அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி
அவினாசி அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தொழிலாளி கொலை
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த எம்.நாதம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வன் (வயது 55). கூலி தொழிலாளி. இவரும், இவரது மகன் நாகராஜனும் (27) ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் செல்வனை கொலை செய்து உடலை வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டு நாகராஜன் தலைமைறைவானார். இந்த கொலை தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை தேடி வந்தனர்.
மகன் கைது
இந்த நிலையில் நேற்று திருமுருகன்பூண்டி டாஸ்மாக் கடை அருகே நாகராஜ் நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று நாகராஜனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் குடியிருக்கும் வீட்டின் உரிமை கொண்டாடுவதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததும், சம்பவத்தன்று இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் நாகராஜ், தந்தை என்றும் பாராமல் செல்வனை கொலை செய்ததும் தெரிய வந்தது.