25 சதவீத இடஒதுக்கீட்டில் மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

கடலூா் மாவட்டத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மெட்ரிக் பள்ளிகளில் படிப்பதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-17 15:40 GMT

கடலூர், 


இதுதொடர்பாக கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

காலஅவகாசம் நீட்டிப்பு

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய மே 18-ந் தேதி (அதாவது இன்று) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது.

 தற்போது நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 25-ந் தேதி வரை 7 நாட்களுக்கு விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காலஅவகாசம் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அதன் பிறகு தகுதியான விண்ணப்பதாரர் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பதாரர் விவரம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் பள்ளி தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் 28-ந் தேதி மாலை 5 மணிக்குள் வெளியிடப்படும்.

30-ந் தேதி குலுக்கல்

பின்னர் தகுதியான விண்ணப்பங்கள் 20 சதவீத ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக இருந்தால் 30-ந் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். 

இதில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள், விண்ணப்ப எண் மற்றும் பள்ளியில் தகுதியுள்ள ஒரு பிரிவுக்கு 5 மாணவர்கள் என்ற வீதத்தில் காத்திருப்பு பட்டியலுக்கான மாணவர்களின் விவரங்கள் ஆகியவை பள்ளி தகவல் பலகை மற்றும் இணையதளத்தில் 31-ந் தேதி வெளியிட வேண்டும்.

சேர்க்கை முடிவுற்ற பின் அந்த விவரத்தினை நிர்ணயிக்கப்பட்ட படிவம் 4-ல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதி அல்லது அதற்கு முன்பாக அந்தந்த பள்ளிகள் அளிக்க வேண்டும். இதில் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யும் பள்ளிகள், மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு தக்க ஆலோசனையினை பெற்று செயல்பட வேண்டும்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்

மேலும் அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பெற்றோர் அதிக அளவில் கூடும் இடங்களில் மாவட்ட கல்வி அலுவலர் அல்லது வருவாய்த்துறை அலுவலர்கள் முன்னிலையில் குலுக்கல் நடத்திட வேண்டும். நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் சார்பில் பெற்றோரிடமிருந்து கோரிக்கை ஏதும் பெறப்பட்டால் குலுக்கல் நடைபெறும் நாளுக்கு முன்பு அதன் மீது விசாரணை செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


பள்ளி பொது தேர்வு மையமாக செயல்படாவிட்டால் 30-ந் தேதி காலையிலேயே குலுக்கல் நடைபெற வேண்டும்.எனவே எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேவையான அலுவலர்களை நியமித்து, இப்பணியினை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்