அம்மன் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு
நாகர்கோவிலில் அம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் அம்மன் கோவிலில் உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உண்டியல் பணம்
நாகர்கோவில் கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி செல்லும் சாலையில் வள்ளியாமடத்து இசக்கி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலையிலும், மாலையிலும் பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் மாலையில் பூசாரி பூஜைகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
நேற்று காலை பூஜைக்காக மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. நள்ளிரவில் யாரோ மர்ம நபர் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. திருட்டுப்போன பணம் ரூ.10 ஆயிரம் இருக்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுபற்றி வடசேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு மர்ம நபரின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
உண்டியல் பணம் திருடப்பட்ட கோவிலில் கண்காணிப்பு கேமரா உள்ளது. அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது நள்ளிரவில் ஒரு மர்ம நபர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. ஆனால் இரவு நேரம் என்பதால் காட்சிகள் சரியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் உண்டியல் பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.