சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி உள்பட 6 பேர் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி உள்பட 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-05-17 00:04 GMT

சேலம்:

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தம்பதி உள்பட 6 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிலையில் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த சம்பத் (வயது 42), விஜயா (67), சதீஷ் (36), அவருடைய மனைவி சரண்யா (36) மற்றும் அகிலா (38), விக்னேஷ் (27) ஆகியோர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்ததும் அவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

பொய் வழக்கு

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரிடம் அவர்கள் கூறியதாவது:-

லீ பஜார் பகுதியில் குடிசை மாற்றுவாரிய நிலம் உள்ளது. இந்த நிலம் தங்களுக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், எங்களுக்கு தான் இந்த இடம் சொந்தம் என்று லீ பஜார் நிர்வாகம் கூறுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிலர் தூண்டுதலின் பேரில் போலீசார் எங்கள் மீது பொய்யான வழக்கு போடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மனமுடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் இங்கு வந்தோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பத் உள்பட 6 பேர் மீது சேலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்