கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு; மாணவ-மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு

கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். துமகூருவில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்

Update: 2022-05-16 22:35 GMT
துமகூரு: கர்நாடகத்தில் 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனர். துமகூருவில் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

பள்ளிகள் திறப்பு

கர்நாடகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் சரியாக திறக்கப்படாமல் இருந்தது. இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு இல்லாத காரணத்தால், பள்ளிகளை முன்கூட்டியே திறக்க அரசு முடிவு செய்தது. அதன்படி, வழக்கமாக ஜூன் 1-ந் தேதி திறக்கப்படும் பள்ளிகள், 15 நாட்களுக்கு முன்பாகவே மே 16-ந் தேதி(அதாவது நேற்று) திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் நேற்று 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் நேற்று மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பையொட்டி மாணவ-மாணவிகளை உற்சாகமாக வரவேற்க வேண்டும் என்றும், வகுப்பறைகள், பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

இதையடுத்து, பள்ளிகளை சுத்தம் செய்தும், வண்ண, வண்ண பூக்களாலும் அலங்கரித்து வைத்திருந்தனர். பள்ளியின் முகப்பு பகுதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் உற்சாகமாக வரவேற்றனா். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூக்களை கொடுத்தும், சாக்லெட் மற்றும் இனிப்புகளை கொடுத்தும் ஆசிரியர்கள், பிற ஊழியர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றதை பார்க்க முடிந்தது.

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று காலையில் கிராம மக்களே திரண்டு வந்து பள்ளிகளை சுத்தம் செய்ததுடன், பூக்களால் அலங்காரம் செய்தார்கள். மண்டியா, சிக்பள்ளாப்பூர், ராமநகர், கலபுரகி, ராய்ச்சூர், துமகூரு, பெங்களூரு புறநகர், பெங்களூரு நகரின் பல பகுதிகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும் நேற்று அதிக அளவு மாணவ-மாணவிகள் அரசு பள்ளிக்கு வந்தனர். அந்த மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மதிய உணவு

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாண-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா இல்லாததால் நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுடன் சேர்த்து இனிப்பும் நேற்று வழங்கப்பட்டது.
கோடை விடுமுறைக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இந்த 15 நாட்களும் மாணவ-மாணவிகளின் கல்வி திறனை அதிகரிக்கும் விதமாக பாடங்கள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் வருகிற 31-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வி மற்றும் கற்றல் திறனை அதிகரிக்கும் வகையில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.

பசவராஜ் பொம்மை வழங்கினார்

இந்த நிலையில், துமகூரு மாவட்டத்தில் உள்ள எம்பிரஸ் பப்ளிக் பள்ளிக்கு நேற்று மதியம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். அங்கு மாணவ-மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச பாடபுத்தகங்களை அவர் வழங்கினார். மேலும் மாணவர்களின் கல்வி திறனை அதிகரிக்கும் திட்டத்தையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்