அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வாங்க கூடாது- அமைச்சர் மூர்த்தி

அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வாங்க கூடாது என்று அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தினார்.

Update: 2022-05-16 21:52 GMT
மதுரை,
அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வாங்க கூடாது என்று அமைச்சர் மூர்த்தி வலியுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டத்தில் புதிய மனைப்பிரிவு அனுமதி, அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்துதல் தொடர்பாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பதிவுத்துறை மற்றும் நகர் ஊரமைப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை நகரம் உட்கட்டமைப்பு வசதிகளில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாக விளங்குகின்றது. பொதுமக்கள் புதிய வீட்டுமனைகளை வாங்கும்போது அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளை வாங்க வேண்டும். அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வாங்குவதால் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சாலை விரிவாக்கம், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அரசு திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கு சிரமங்கள் ஏற்படுகின்றன. ஊரகப் பகுதிகளில் மனைப்பிரிவின் உரிமையாளர்களால் கிராம ஊராட்சியின் பெயருக்கு சாலை மற்றும் பொது திறவிட பகுதிக்கான இடங்களை தானமாக பெறும் இடங்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளின் பெயருக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்ய வேண்டும்.
ஆவணங்கள்
இனிவரும் காலங்களில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் போது சாலை மற்றும் பொது திறவிட பகுதிக்கான ஆவணத்தினை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பெயருக்கு மாற்றம் செய்த பிறகே உரிய ஆவணங்களுடன் அதற்கான உத்தரவினை ஊராட்சி ஒன்றியங்களுக்கு அனுப்பி வைத்திட வேண்டும். ஊரகப் பகுதிகளில் மனைப்பிரிவுகள் உருவாக்கும் போது உரிய ஆவணங்களின்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், எதிர்காலத்தில் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் பாதுகாத்தல் போன்ற  பொறுப்பு சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற நிர்வாகத்தை சேரும்.
மேலும், ஊரகப் பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளில் வீடுகள் கட்டுவதற்கு கட்டிட வரைபட அனுமதி வழங்கும்போது ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆவணங்களை முழுமையாக ஆராயாமல் விதிமுறைகளை மீறி அனுமதி வழங்குவது சட்டப்படி குற்றமாகும். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வரும் முன் காப்போம் 
மேலும் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரிச்சூர் கிராமத்தில் பொது சுகாதாரத்துறையின் சார்பாக கலைஞர் வரும் முன் காப்போம் திட்ட முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ்சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இல்லம் தேடி கல்வித்திட்டம், மக்களை தேடி மருத்துவம் திட்டம், பெண்களுக்காக இலவச பஸ் பயண திட்டம் போன்ற அரசு திட்டங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதன்படி கலைஞரின் பெயரில் வருமுன் காப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் அமைச்சர் மூர்த்தி கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அதன்பின் அவர் வரிச்சூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட புறநகர் காவல்நிலையத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வெங்கடேசன் எம்.பி., போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்