கோடைவிடுமுறையில் சுற்றுலாத்தலங்களுக்கு படையெடுக்கும் மக்கள்;திற்பரப்பு அருவியில் உற்சாக குளியல்
குமரி மாவட்டத்தில் கோடைவிடுமுறையில் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.
திருவட்டார்,
குமரி மாவட்டத்தில் கோடைவிடுமுறையில் சுற்றுலாத்தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்கிறார்கள்.
சுற்றுலாத்தலங்களில் கூட்டம்
கொரோனா காரணமாக கோடை விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா தொற்று குறைந்துள்ளதால் இந்த வருட கோடைவிடுமுறைக்கு மக்கள் சுற்றுலாதலங்களுக்கு படையெடுத்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் சுற்றுலாதலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக திற்பரப்பு அருவியில் தொடர்ந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அங்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணியை தாண்டிய பின்னரும் அங்கு குளிப்பதற்காக ஏராளமானோர் வந்தனர்.
கூடுதல் போலீசார்...
திற்பரப்பில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து அங்கு கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணித்தனர். இதனால் போக்குவரத்து நெரிசலின்றி காணப்பட்டது.
மேலும் திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்தபடி படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் மாத்தூர் தொட்டிப்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததை காணமுடிந்தது. அதே சமயத்தில் வியாபாரமும் களை கட்டியது.
குமரி மாவட்டத்தில் சீசன் காலங்களில் சந்தைக்கு வரும் செங்கவருக்கை மாம்பழம், அயனி பலாப்பழம், நுங்கு ஆகியவற்றை விருப்பமுடன் வாங்கி சுற்றுலா பயணிகள் சாப்பிட்டனர். மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் மூன்று முதல் நான்கு அன்னாசிப்பழம் வரை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.