கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார்; பா.ஜனதாவில் இன்று சேருகிறார்

ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய பசவராஜ் ஹொரட்டி, கர்நாடக மேல்-சபை தலைவர் பதவியையும் நேற்று ராஜினாமா செய்தாா். இன்று(செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா கட்சியில் அவர் சேர இருக்கிறார்

Update: 2022-05-16 21:10 GMT
பெங்களூரு: ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகிய பசவராஜ் ஹொரட்டி, கர்நாடக மேல்-சபை பதவியையும் நேற்று ராஜினாமா செய்தாா். இன்று(செவ்வாய்க்கிழமை) பா.ஜனதா கட்சியில் அவர் சேர இருக்கிறார்.

பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா

கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்து வந்தவர் பசவராஜ் ஹொரட்டி. இவர், ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து மேல்-சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். மேல்-சபையில் ஜனதாதளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்ததை தொடர்ந்து, பசவராஜ் ஹொரட்டி மேல்-தலைவரானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகினார். மேலும் பசவராஜ் ஹொரட்டி பா.ஜனதாவில் சேரவும் முடிவு செய்தார்.

சமீபத்தில் பெங்களூருவுக்கு வந்த அமித்ஷாவையும் அவர் சந்தித்து பேசி இருந்தார். அமித்ஷாவும், பசவராஜ் ஹொரட்டியை பா.ஜனதாவில் சேர்க்க சம்மதம் தெரிவித்தார். இந்த நிலையில், மேல்-சபையில் காலியாக உள்ள பட்டதாரி-ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாக நேற்று மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டி ராஜினாமா செய்தார்.

விதானசவுதா செயலாளரிடம் கடிதம்

பெங்களூருவில் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை விதானசவுதா செயலாளரிடம், பசவராஜ் ஹொரட்டி வழங்கினார். மேல்-சபை துணை தலைவரிடம் தான் ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும். தற்போது மேல்-சபை துணை தலைவர் யாரும் இல்லாததால், ராஜினாமா கடிதத்தை விதானசவுதா செயலாளரிடம் பசவராஜ் ஹொரட்டி வழங்கினார்.
இதுபற்றி பசவராஜ் ஹொரட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

இன்று பா.ஜனதாவில் சேருகிறார்

மேல்-சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். மேற்கு ஆசிரியர் தொகுதிக்கு நடைபெறும் மேல்-சபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட உள்ளேன். இதற்காக நாளை(அதாவது இன்று) பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக பா.ஜனதா கட்சியில் சேர உள்ளேன். என்னை தவிர எனது குடும்பத்தில் யாரும் அரசியலில் இல்லை.

இனியும் அரசியலுக்கு வரமாட்டார்கள். மேற்கு ஆசிரியர்கள் தொகுதியில் இதுவரை 7 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். 8-வது முறையாக அந்த தொகுதியில் போட்டியிட உள்ளேன். பா.ஜனதாவை சேர்ந்த மோகன் லிம்பேகாய் சுயேச்சையாக போட்டியிடுவது பற்றி எனக்கு தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்