நெல்லையில் காமராஜர், இந்திரா காந்தி சிலை திறப்பு விழா: “நாட்டு மக்களின் உரிமைக்காக தி.மு.க.-காங்கிரஸ் இணைந்து பணியாற்றும்” கனிமொழி எம்.பி. பேச்சு

“நாட்டு மக்களின் உரிமைக்காக தி.மு.க.-காங்கிரஸ் கட்சி இணைந்து பணியாற்றும்” என்று நெல்லையில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்

Update: 2022-05-16 20:49 GMT
நெல்லை:
“நாட்டு மக்களின் உரிமைக்காக தி.மு.க.-காங்கிரஸ் கட்சி இணைந்து பணியாற்றும்” என்று நெல்லையில் நடந்த விழாவில் கனிமொழி எம்.பி. பேசினார்.
சிலைகள் திறப்பு விழா
நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இருந்த காமராஜர், இந்திரா காந்தி சிலைகள் புனரமைக்கப்பட்டு வெண்கல சிலைகளாக புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் திறப்பு விழா நேற்று மாலையில் நடந்தது. முன்னாள் மத்திய மந்திரியும், சிலை அமைப்புக்குழு தலைவருமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார்.
கனிமொழி-கே.எஸ்.அழகிரி
காமராஜா் சிலையை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், இந்திரா காந்தி சிலையை கனிமொழி எம்.பி.யும் திறந்து வைத்தனர். 
விழாவில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அவர் வழியில் கருணாநிதி உயர் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு உறுதுணையாக இருந்தார். இப்படி கல்விக்காக நாம் போராடி யார் படிக்க வேண்டும், யாருக்கு சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்தார்களோ அவர்களுக்கு இன்று கல்வி கிடைக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு ஆகியவற்றை கொண்டுவந்து தடுத்து வருகிறது.
இணைந்து பணியாற்றும்
எந்த நாடு மதம், வெறுப்பு அரசியல் மற்றும் மக்களைப் பிரித்தாள நினைக்கிறதோ அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேற முடியாது. மதம் ஒருவருடைய தனிப்பட்ட விருப்பமாகும். அதில் அரசியலை நுழைக்க கூடாது. சாதி, மதத்தை வைத்து அரசியல் செய்தால் நாடு முன்னேற்ற பாதையில் செல்லாது.
அமைதி, முன்னேற்றம், அடுத்த தலைமுறையை பாதுகாக்க வேண்டும் என்றாலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்றாலும் நாம் அனைவரும் அதை தடுக்கின்ற சக்தியை எதிர்க்க வேண்டும்.
நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும், நாட்டு உரிமைக்காகவும் காங்கிரசும், தி.மு.க.வும் இணைந்து பணியாற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழர்களுக்கு கிடைத்த பெருமை
விழாவில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
காமராஜர் இரண்டு பிரதமர்களை உருவாக்கினார் என்றால் அது தமிழர்களுக்கு கிடைத்த பெருமையாகும். சோழர்களுக்கு பிறகு தமிழர்களின் பெருமையை உலகறிய செய்தவர் காமராஜர். புத்தருடைய பிறந்தநாளில் காமராஜர் சிலையை திறந்து வைப்பது மிக்க மகிழ்ச்சியாகும். 
இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தியவர் இந்திரா காந்தி. அவர் புரட்சிப்பெண் என்று அழைக்கப்படுகிறார். நாட்டில் பசுமை புரட்சியை ஏற்படுத்தியவர் இந்திராகாந்தி. அரிசி, கோதுமையை நாம் இன்று ஏற்றுமதி செய்வதற்கு மூலக்காரணம் இந்திராகாந்தி தான். இன்று அவருடைய சிலையை திறந்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள்
இந்த விழாவில் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், விஜய் வசந்த், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், நெல்லை மாநகர் மாவட்ட தலைவரும், சிலை அமைப்புக் குழு செயலாளருமான கே.சங்கரபாண்டியன், பொருளாளர் டியூக் துரைராஜ், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், தென்காசி மாவட்ட தலைவர் பழனி நாடார் எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அப்துல்வகாப், ராஜேஷ்குமார், பிரின்ஸ், முன்னாள் எம்.பி.க்கள் ராமசுப்பு, விஜிலா சத்யானந்த், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், செயல் தலைவர்கள் மயூரா ஜெயக்குமார், மோகன் குமாரமங்கலம், மாநில பொதுச் செயலாளர் எம்.எஸ்.காமராஜ், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் வி.பி.துரை, வக்கீல் அணி மாநில துணை தலைவர் மகேந்திரன், தென்காசி மாவட்ட பொருளாளர் முரளிராஜா, நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் மகேசுவரி, கணேஷ்குமார் ஆதித்தன், காமராஜர் முழு உருவ வெண்கல சிலையை நன்கொடையாக வழங்கிய சிங்கப்பூர் தி.மு.க. அயலக அணி துணை பொறுப்பாளர் எஸ்.ஜெ.மகாகிப்ட்சன், மேலப்பாளையம் டாக்டர் பிரேமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிலை வழங்கிய எஸ்.ஜெ.மகாகிப்ட்சன் கவுரவிக்கப்பட்டார். முடிவில் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் நன்றி கூறினார்.  விழாவையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலையில் இருந்து மாநகராட்சி கவுன்சிலர்கள் அனுராதா, அம்பிகா ஆகியோர் தலைமையில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

மேலும் செய்திகள்