சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்-ரொக்கப்பரிசு

சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்-ரொக்கப்பரிசை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

Update: 2022-05-16 20:02 GMT
தஞ்சாவூர்:
சமையல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்-ரொக்கப்பரிசை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், மகளிர், மாணவர்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
மொத்தம் 344 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை தொடர்பான விவரத்தை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பாராட்டு சான்றிதழ்
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு 2021-22-ம் ஆண்டிற்கான சிறந்த சமையலர் மற்றும் உதவியாளர் விருது, பாராட்டு சான்றிதழ், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு 2 பேருக்கும், மாவட்ட அளவில் நடைபெற்ற சமையல் போட்டியில் வெற்றி பெற்ற 2 பேருக்கு பாராட்டு சான்றிதழ், முதல்பரிசாக ரூ.2,500-ம், 2-ம் பரிசாக ரூ.1,500-க்கான காசோலையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.
மேலும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மதுக்கூர் வட்டம் ஆலத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு கடனுதவியாக ரூ.49 லட்சம் மதிப்பிலான காசோலையும், துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் பணியின்போது இறந்த 3 பேரின் குடும்பத்தினருக்கு சட்டப்படியான நிலுவைத்தொகை ரூ.8 லட்சத்து 32 ஆயிரத்து 129 மதிப்பிலான காசோலையும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ரேணுகாதேவி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்