மின்னல் தாக்கி 5 பேர் காயம்
ஆரணி அருகே மின்னல் தாக்கி 5 பேர் காயம் அடைந்தனர். சினை மாடும் பலியானது.
ஆரணி
ஆரணி அருகே மின்னல் தாக்கி 5 பேர் காயம் அடைந்தனர். சினை மாடும் பலியானது.
சினைப்பசு பலி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராந்தம் கிராமத்தில் அதிகாலையில் மழை ெபய்தது. அப்போது சங்கர் என்பவரின் மாடி வீட்டின் மீது மின்னல் தாக்கியது. வீட்டில் இருந்த சங்கர், அவரின் தாயார் முனியம்மாள், மனைவி சூடாமணி மற்றும் யுவராணி, அவரின் கைக்குழந்தை விஷ்வேஷா ஆகிய 5 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
வீட்டின் மின் இணைப்பு சாதனங்கள், மின்சார பொருட்கள் சேதம் அடைந்தன. வீட்டின் சுவர்கள் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டது. மேலும் வீட்டின் அருகில் கட்டியிருந்த சினை மாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, விவேகானந்தன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு மாவட்ட கலெக்டர் பா.முகேசுக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆறுதல்
மேலும் தகவல் அறிந்த முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு நேரில் வந்து இடி, மின்னல் தாக்குதலுக்குள்ளான வீட்டை பார்வையிட்டு விசாரித்தார். அங்கு பலியாகி கிடந்த சினைமாட்டை பார்வையிட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்ய வந்த கால்நடை மருத்துவரிடம் முறையாக பிரேத ஆய்வு அறிக்கை கொடுத்து, அவர்களுக்கு அரசு மூலம் கிடைக்க வேண்டிய நிவாரணங்களை பெற்றுத் தாருங்கள், என அறிவுரை வழங்கினார். அங்கிருந்த தாசில்தாரிடமும் விவரங்களை கேட்டறிந்தார். ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
அப்போது ஆவின் தலைவர் பாரி பி.பாபு, மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் வக்கீல் கே.சங்கர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜி.வி.கஜேந்திரன், நகர செயலாளர் அசோக்குமார் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
அரிசி, மளிகைப்பொருட்கள்
மேலும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெயராணி ரவி, ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் ஆகியோர் அரசு அதிகாரிகளுடன் அவர்களின் வீட்டுக்கு சென்று காயம் அடைந்தவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். அவர்களுக்கு 25 கிலோ அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை நிவாரணமாக வழங்கினர்.