பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

Update: 2022-05-16 18:32 GMT


திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 

பவுர்ணமி கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தூரம் பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 

கார்த்திகை தீபத்திருவிழா மற்றும் சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். 
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணி அளவில் தொடங்கி நேற்று காலை 10.20 மணி அளவில் நிறைவடைந்தது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் பகலில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். 

பகலில் அடித்த வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மாலைக்கு மேல் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவு 7 மணியில் இருந்து நள்ளிரவு வரை திருவண்ணாமலையில் மிதமான மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் கையில் குடையை பிடித்தப்படி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

நீண்ட வரிசையில் பக்தர்கள்

மழையின் காரணமாக திருவண்ணாமலை நகரில் நேற்று முன்தினம் இரவு குடை விற்பனை அமோகமாக நடைபெற்றது. அதிகாலை 4 மணி வரை லேசான சாரல் மழை பெய்தது. இருப்பினும் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர். 

நேற்று காலை வரை பவுர்ணமி நீடித்ததால் 2-வது நாளாக நேற்று பகலிலும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும் கிரிவலம் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக அருணாசலேஸ்வரர் கோவிலில் குவிந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. 

பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசனம் வழி கோவிலுக்குள் மட்டுமின்றி சாலை வரை நீண்டு காணப்பட்டது. 

பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கோவிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்