தடுப்புச்சுவரில் கார் மோதி தங்கும் விடுதி உரிமையாளர் சாவு

வத்தலக்குண்டு அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி தங்கும் விடுதி உரிமையாளர் உயிரிழந்தார்.

Update: 2022-05-16 18:30 GMT
வத்தலக்குண்டு:
கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் மைக்கேல் பிரதீப் (வயது 34). தங்கும் விடுதி உரிமையாளர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஹரிகரன் (35), லியோ (30) ஆகியோருடன் காரில் கொடைக்கானலில் இருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை ஹரிகரன் ஓட்டினார். 
வத்தலக்குண்டுவை அடுத்த மல்லணம்பட்டி வளைவு பகுதியில் வந்தபோது, சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் எதிர்பாராதவிதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மைக்கேல் பிரதீப் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் செல்லும் வழியிலேயே மைக்கேல் பிரதீப் பரிதாபமாக உயிரிழந்தார். லியோ, ஹரிகரன் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இறந்த மைக்கேல் பிரதீப்புக்கு கலினா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்