தலைமறைவாக இருந்த பணி மேற்பார்வையாளர் கைது
ரதமர் வீடு கட்டும் திட்டத்தில் லஞ்சம் வாங்கியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்
திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள வேலங்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட கமுகக்குடி கிராமத்தை சேர்ந்தவர் லெனின். இவரது மகன் மணிகண்டன்(வயது 25). தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்து இருந்தார்.
இதனையடுத்து வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அவருக்கு அனுமதி கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மணிகண்டன் வீடு கட்டும் பணிகளை தொடங்கினார்.
வீடு கட்ட லஞ்சம்
இந்த நிலையில் வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக(ஓவர்சீயர்) வேலைபார்க்கும் மகேஸ்வரன் என்பவர் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனால் தான் கடனாளியாகி விட்டதாகவும் பேசி அதை மணிகண்டன் வீடியோவில் பதிவிட்டு இருந்தார்.அவர் உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஷம் குடித்து தற்கொலை
இதனிடையே லஞ்சம் கொடுத்ததால் மனம் உடைந்த மணிகண்டன் விஷம் குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதனைத்தொடர்ந்து பேரளம் போலீசார் மணிகண்டனை தற்கொலைக்கு தூண்டியதாக மகேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடி வந்ததை அறிந்த மகேஸ்வரன் தலைமறைவானார்.
கைது
இந்த நிலையில் நேற்று திருவாரூர் பழைய பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த மகேஸ்வரனை போலீசார் பிடித்து கைது செய்தனர்.
கைதான மகேஸ்வரனை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்ததுடன், மகேஸ்வரன் மீது ஊழல் மற்றும் கண்காணிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்து இருந்தனர். எனவே மகேஸ்வரன் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.