வெப்படை அருகே சேலம் கல்லூரி மாணவர் விபத்தில் பலி
வெப்படை அருகே மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் பலியானார்.
பள்ளிபாளையம்:
கல்லூரி மாணவர்
சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் முரளி. இவருக்கு சூர்யா (வயது 22) என்ற மகனும், ஒரு மகளும் இருந்தனர். முரளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை சொக்கானூரில் குடும்பத்துடன் தங்கி விட்டார். சூர்யா சேலம் சாமிநாதபுரம் மருதநாயகம் தெருவில் தனது சித்தி வீட்டில் தங்கி, தனியார் கலை கல்லூரியில் படித்து வந்தார். மேலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சாமிநாதபுரம் கிளை தலைவராக இருந்து வந்தார்.
இந்தநிலையில் சூர்யா தனது அக்காவை பார்ப்பதற்காக கோவைக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் அதிகாலை அவர் சேலத்துக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார்.
விபத்தில் பலி
வழியில் வெப்படை அருகே பச்சாம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சூர்யா, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர். வெப்படை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.