தமிழகத்தில் நதிகளை இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்-கலெக்டரிடம் மனு
தமிழகத்தில் நதிகளை இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
நாமக்கல்:
வீணாகும் உபரிநீர்
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கொளக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 200 டி.எம்.சி. உபரிநீர் காவிரி, வைகை, பாலாறு, தென்பெண்ணை ஆறுகள் வழியாக சென்று கடலில் வீணாக கலக்கிறது. சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இந்திய நதிகள் இணைப்பு திட்டம் கானல் நீராகவே உள்ளது. எனவே தண்ணீர் பற்றாக்குறை மாநிலமாக இருக்கும், தமிழகத்தில் இந்திய நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்ட வேண்டும்.
நிதிகளை இணைக்க வேண்டும்
முதல்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்து ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீர் தேக்கங்கள் ஆகியவற்றிற்கு உபரிநீரை கொண்டு சென்று, அவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்வதால் விவசாயம், குடிநீர், மின்சாரம், வேலைவாய்ப்பு பெருகும். எனவே தமிழக நதிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
இதேபோல் இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து சாதிவாரி கணக்கெடுப்பு வீடு, வீடாக நடைபெறவில்லை. இந்த கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே அனைத்து சமூக மக்களுக்கும் இடஒதுக்கீடு சமமாக வழங்க முடியும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.