நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்காவிட்டால் உண்ணாவிரதம்-தொழிலாளர் நலச்சங்கத்தினர் எச்சரிக்கை

நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தொழிலாளர் நலச்சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-05-16 17:30 GMT
நாமக்கல்:
மாட்டுவண்டி மணல் குவாரி
நன்செய் இடையாறு உழவர் மாட்டுவண்டி தொழிலாளர் நல சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மோகனூர் தாலுகா நன்செய் இடையாறு காவிரி ஆற்றில் 4.90 எக்டேர் பரப்பில் மாட்டுவண்டி மணல் குவாரி திறக்க கடந்த 18.12.2020 முதல் 2 ஆண்டு கால அளவிற்கு அனுமதி கொடுத்து சுற்றுச்சூழல் துறை மூலம் அறிவிப்பு வெளியானது. ஆனால் இதுவரை மணல் குவாரி திறக்கப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று முழுமையாக குறைந்து சகஜமான சூழல் நிலவுவதையும், மாட்டு வண்டி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதையும் பரிசீலனை செய்து, நன்செய் இடையாறு மணல் குவாரியை திறக்க உத்தரவிட வேண்டும்.
உண்ணாவிரதம்
தஞ்சாவூர் மாவட்டம் கோத்தான் குடியில் மாட்டு வண்டி மணல்குவாரி செயல்படுவதையும், திருச்சி மாவட்டம் மாதாவரம், சாலக்குடி ஆகிய இடங்களில் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் சிதைந்து போனதால், இனியும் குவாரி செயல்பாட்டுக்கு வராத பட்சத்தில் மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்ட இடத்தில் எங்களது குடும்பத்தாருடன் உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இந்த போராட்டத்தை வருகிற 24-ந் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்