நூல் விலையை குறைக்கக்கோரி கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

நூல் விலையை குறைக்கக்கோரி கரூரில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதனால் ரூ.100 கோடிக்கு வர்த்தகம், உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-05-16 17:22 GMT
கரூர்
கரூர், 
நூல் விலை ஏற்றம்
கரூர் மாநகரில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் ஒரு ஆண்டுக்கு சுமார் ரூ.8 ஆயிரம் கோடி அளவிற்கு வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இதில் ரூ.4 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். இதனால் கரூர் நகரம் மத்திய அரசினுடைய சிறப்பான ஏற்றுமதி நகரம் என்ற அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
 இந்நிலையில் நூல் விலைஏற்றம் தொடர்ந்து நீடித்தால் பருத்தி நூலை அதிக அளவில் பயன்படுத்தி வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை உற்பத்தி செய்யும் கரூர் ஜவுளி நிறுவனங்கள் அவர்களுடைய வர்த்தக ஒப்பந்தங்களை இழக்க நேரிடும் என்றும், இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் பருத்தி நூல் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கவனஈர்ப்பு வேலைநிறுத்தத்தை அறிவித்திருந்தனர்.
2½ லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
இதனையடுத்து கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம், கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் ஓனர் அசோசியேசன், கரூர் ஏற்றுமதி துணி உற்பத்தியாளர்கள் சங்கம், கரூர் நூல் வர்த்தகர்கள் சங்கம் ஆகிய சங்கங்களை சேர்ந்தவர்கள் கவனஈர்ப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக கரூர் செங்குந்தபுரம், ராமகிருஷ்ணபுரம், காமராஜபுரம், எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. 
இந்த வேலைநிறுத்தத்தில் 400 ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், 400 உள்நாட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், 150 நூல் வினியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள், 50 டையிங் மற்றும் பிரிண்டிங் தொழிற்சாலைகள், 500-க்கும் மேற்பட்ட சிறு தையல் நிறுவனங்கள், 500-க்கும் மேற்பட்ட ஜவுளி தொழில் சார்ந்த நிறுவனங்கள் சார்பாக சுமார் 2½ லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். 
ரூ.100 கோடி வர்த்தகம்-உற்பத்தி பாதிப்பு
இதனால் ஜவுளி உற்பத்தி, ஏற்றுமதி, டையிங், பிரிண்டிங் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறுத்தம் செய்யப்பட்டன. இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கரூர் மாவட்டத்தில் சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான அளவில் வர்த்தகம் மற்றும் ஜவுளி உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்