வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஜோலார்பேட்டை அருகே வெளி மாநிலத்துக்கு கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் அரிசி மினி வேனில் கடத்துவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின்பேரில் திருப்பத்தூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில், ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் அச்சமங்கலம் பகுதியில் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது வேகமாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்ததில் 2½ டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை மினி வேனுடன் பறிமுதல் செய்தனர். மேலும் வேன் டிரைவர் ஆதியூர் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் மகன் அருண்குமார் (வயது 27) என்பவரை கைது செய்து உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.