கல்வராயன்மலையில் மிதமான மழை கோமுகி அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் வரத்து

கல்வராயன்மலையில் பெய்த மிதமான மழையால் கோமுகி அணைக்கு வினாடிக்கு 100 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. கல்படை ஆற்று தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டது

Update: 2022-05-16 17:05 GMT
கச்சிராயப்பாளையம்

மிதமான மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த இரு நாட்களாக பரவலாக மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் பலத்த மழை பொழிந்தது.

கல்வராயன்மலை

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. கல்வராயன்மலை நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மூன்று நாட்களாக மிதமான மழை பெய்தது.  இதனால் கல்படை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 
பின்னர் காலை 10 மணிக்கு பிறகு ஆற்றில் தண்ணீர் வரத்து சற்று குறைய தொடங்கியதால் மீண்டும் வாகன போக்குவரத்து நடைபெற்றது. 

கோமுகி அணை

கல்படை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கோமுகி அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி நீர் வரத்து காணப்பட்டது. அணையின் நீர் மட்டம் ஏற்கனவே 24 அடி இருந்த நிலையில் தற்போது நீர் வரத்து தொடங்கி இருப்பதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீர் வீழ்ச்சிகளில்

மேலும் கல்வராயன்மலையில் பெய்து வரும் மழையால் கல்வராயன் மலையில் உள்ள மேகம், கவியம், பெரியார் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. பல மாதங்களுக்கு பிறகு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுவதை அறிந்து சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர்.
நேற்று பெரியார் நீர் வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதனால் கல்வராயன் மலைக்கு சுற்றுலா பயணிகள் வரத்து களைகட்ட தொடங்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்