கர்நாடகத்தில் 11½ லட்சம் ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு

கடந்த ஆண்டு (2021) டிசம்பர் இறுதி நிலவரப்படி, கர்நாடகத்தில் 11½ லட்சம் ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Update: 2022-05-16 16:44 GMT


பெங்களூரு:

விவசாயம் சார்ந்த பயன்பாடு

  கர்நாடகத்தில் உள்ள அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து ஆய்வறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
  கர்நாடகத்தில் உள்ள மொத்த அரசு நிலங்களில் 11.5 லட்சம் ஏக்கர் நிலம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதில் 9.9 லட்சம் ஏக்கர் அளவிற்கு சட்டவிரோதமாக விவசாயம் சார்ந்த பயன்பாடுகளுக்கு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

  9,700 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதிலும் குறிப்பாக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவில் அதிகபட்சமாக 22 சதவீதம் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. அதுதொடர்பான வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அடுத்ததாக மைசூரு மாவட்டத்தில் 20 சதவீதம் பங்களிப்பை கொண்டுள்ளது.

14 ஆயிரம் ஏக்கர்...

  அதேசமயம் மாநிலத்தில் 14 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சாலை, பாலம், கட்டிடங்கள் போன்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில்
பெங்களூருவில் பங்கு 92 சதவீதமாக உள்ளது. மாவட்ட வாரியாக நடைபெற்ற ஆய்வில் ஆக்கிரமிப்பு நிலங்களில் சித்ரதுர்கா, சிக்கமகளூரு, சிவமொக்கா மற்றும் உடுப்பி ஆகிய மாவட்டங்களின் பங்கு 45 சதவீதமாக உள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் வேளாண் பயன்பாட்டிற்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அரசின் வசம்

  அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
  ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலங்களை மீட்கும் பணியில் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அனைத்து விதமான அரசு நிலங்களும் அரசின் வசம் பெறப்படும்.

  பொது திட்டங்கள் மற்றும் வழக்கில் சிக்கி உள்ள நிலங்களை தவிர மீதம் உள்ள 4 லட்சம் ஏக்கர் நிலத்தில் 1.3 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே மீட்கப்படாமல் உள்ளது.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்