தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்கான புதிய கூட்டுக்கூடிநீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2022-05-16 16:41 GMT
தேனி: 

குறைதீர்க்கும் கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 161 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது தேனி மாவட்ட அனைத்து வண்ணார் முன்னேற்ற நலச்சங்க தலைவர் சிவக்குமார் தலைமையில் சலவைத்தொழிலாளர்கள் பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நின்று கொண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கூடலூரில் சலவைத் துறைக்கு சொந்தமான இடத்தை மதுரை புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக அபகரிப்பதாகவும், இது விவசாயிகள், சலவைத் தொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குடிநீர் திட்டத்தை ரத்து செய்யக்கோரிஆர்ப்பாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கான குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சலவைத் தொழிலாளர்களுக்கு பட்டா வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில், தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருந்த போது சிலர் கலெக்டர் அலுவலகம் அருகில் மதுரைக்கான புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக வைக்கப்பட்டு இருந்த ராட்சத குடிநீர் குழாய்க்குள் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பூதிப்புரத்தை சேர்ந்த வக்கீல் குமாரலிங்கம் தலைமையில் மக்கள் சிலர் கொடுத்த மனுவில், "பூதிப்புரத்தில் ஒருவர் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்தி வருகிறார். எனவே, சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்