இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா கடலூரில் பரபரப்பு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-05-16 16:15 GMT

கடலூர், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள க.தொழுர் கிராமத்தில் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் 100 குடும்பத்தினருக்கு வீட்டுமனைபட்டா இல்லை என கூறப்படுகிறது.

 இதுதொடர்பாக அவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களில் மனு அளித்தும், இதுவரை இலவச மனைப்பட்டா வழங்க அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது கிராம மக்கள், நாங்கள் கடந்த 30 ஆண்டுகளாக இலவச மனைப்பட்டா கேட்டு மனு அளித்தும் இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. 
மேலும் அதிகாரிகள் எங்களை தொடர்ந்து அலைக்கழித்து வருகின்றனர். அதனால் எங்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அதற்கு போலீசார், உங்கள் கோரிக்கை தொடர்பாக கலெக்டரிடம் மனு அளியுங்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானப்படுத்தினர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
 பின்னர் கலெக்டர் பாலசுப்பிரமணியத்திடம், கோரிக்கை மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்