விழுப்புரம் மாவட்டத்தில் விசைப்படகுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்
விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் விசைப்படகுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்,
கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள கடற்கரை பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்களுக்கு கடலில் மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் தமிழகத்தில் இயங்கும் அனைத்து வகை மீன்பிடி விசைப்படகுகளும் (பதிவு செய்யப்பட்டவை மற்றும் பதிவு செய்யப்படாதவை) ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு படகின் உறுதித்தன்மை, எந்திரத்தின் குதிரைத்திறன் அளவு, படகின் நீளம், அகலம் ஆகியவை பதிவுச்சான்றுடன் சரிபார்க்கப்பட்டு அதன் அடிப்படையில் மானிய விலையிலான எரிஎண்ணெய் மற்றும் இதர மானிய திட்டங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
படகுகள் ஆய்வு
இந்நிலையில் மீன்பிடி விசைப்படகுகளை வெளிமாவட்டங்களில் இருந்து வருகை புரியும் மீன்வளத்துறை அலுவலர்களால் விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை), நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது மீனவர்கள் தங்களது மீன்பிடி விசைப்படகினை ஆய்வுக்கு கட்டாயம் உட்படுத்திட வேண்டும்.
மேலும் படகு பதிவு குறித்த ஆவணங்கள், தொலைதொடர்பு கருவிகள் ஆகியவற்றை ஆய்வுக்குழுவிடம் காண்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத மீன்பிடி விசைப்படகுகளுக்கான மானிய விலையிலான எரிஎண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன் படகு உரிமையாளர் மீது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விழுப்புரம் மாவட்ட விசைப்படகு உரிமையாளர்கள் அனைவரும் தங்களது படகுகளை தவறாமல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.