ஈரோட்டில் 10 ஆயிரம் ஜவுளிக்கடைகள் அடைப்பு
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 10 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 10 ஆயிரம் ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
நூல் விலை உயர்வு
ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலதனமாக பஞ்சு உள்ளது. பஞ்சு விலை உயர்வு காரணமாக நூல் விலை ஏற்றம் அடைந்தது. இதனால் ஜவுளி உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நூல் விலை தினமும் ஏற்றப்பட்டு வந்ததால் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே நூல் விலையை மாதந்தோறும் நிர்ணயிக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை நூல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்தநிலையில் பஞ்சு தட்டுப்பாடு காரணமாக நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஜவுளிகளின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. ஜவுளி விற்பனை குறைந்துவிட்டதால் நூல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கடையடைப்பு போராட்டம்
நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் ஏற்கனவே கடந்த மாதம் 15-ந் தேதி ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் நூல் விலை குறையவில்லை. இந்த நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று ஜவுளி உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.
அதன்படி ஈரோட்டில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதையொட்டி ஈரோடு திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டன. மேலும், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் செயல்படவில்லை. இதேபோல் கனிமார்க்கெட் சந்தையும் செயல்படவில்லை. ஈரோட்டில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாலையில் இருந்து செவ்வாய்க்கிழமை இரவு வரை ஜவுளிச்சந்தை நடைபெறும். இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் வந்து ஜவுளிகளை மொத்தமாக வாங்கி செல்வது வழக்கம். ஆனால் கடையடைப்பு போராட்டம் காரணமாக ஜவுளிச்சந்தையும் செயல்படவில்லை. அதேசமயம் மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.
ரூ.50 கோடி
இதுகுறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளில் நூல் விலை 2 மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் ஜவுளி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பஞ்சு ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். பஞ்சுக்கான இறக்குமதி வரி வருகிற செப்டம்பர் மாதம் வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதேசமயம் ஜவுளி தொழிலுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் நூல் தேக்கி வைத்து விலை ஏற்றத்துக்கு வழிவகை செய்கிறார்கள். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தி, வணிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் 2 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இதன்காரணமாக 10 ஆயிரம் ஜவுளிக்கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டு உள்ளன. மேலும், கனிமார்க்கெட் வாரச்சந்தையும் செயல்படவில்லை. ஜவுளி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. நூல் விலை உயர்வு காரணமாக 75 சதவீதம் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஜவுளி தொழிலை சார்ந்து உள்ளவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இன்றும் (செவ்வாய்க்கிழமை) 2-வது நாளாக கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதனால் கனிமார்க்கெட் ஜவுளி சந்தையும் அடைக்கப்படுகிறது.