புளியரை சோதனைச்சாவடியை முற்றுகையிட்ட 50 பேர் கைது
கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கக்கோரி, புளியரை சோதனைச்சாவடியை முற்றுகையிட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை:
தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு மணல், ஜல்லிக்கற்கள் போன்ற கனிமவளங்களை கொண்டு செல்ல தடை விதிக்க வலியுறுத்தி, அனைத்து சமூக அமைப்புகள் சார்பில், நேற்று காலையில் செங்கோட்டை அருகே புளியரை போக்குவரத்து சோதனைச்சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் தலைமை தாங்கினார். ராமநதி ஜம்புநதி கால்வாய் செயல்பாட்டு குழு அமைப்பாளர் உதயசூரியன், சமூக ஆர்வலர்கள் புளியரை ஜமீன், தேவசகாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத், கவுன்சிலர் மாரிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை புளியரை போலீசார் கைது செய்து, அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் தமிழக-கேரள மாநில எல்லையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.