காதல் திருமணம் செய்த பெண் திடீர் சாவு
ஆம்பூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் திடீரென இறந்தார். அவருடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஆம்பூர்
ஆம்பூர் அடுத்த துத்திபட்டு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் (வயது 28). தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (24). இவர்கள் இருவரும் அந்தப்பகுதியில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் ஒன்றாக வேலை செய்துள்ளனர். அப்போது அவர்களிடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சுப்புலட்சுமி தனது பெயரை ஹனிபா என மாற்றிக் கொண்டார். இந்தநிலையில் ஹனிபா உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இதையறிந்த ஹனிபாவின் தாயார் தனலட்சுமி தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக உமராபாத் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் ஹனிபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.