வேலூரில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் செல்லியம்மன் கோவில் வளாகத்துக்குள் காலணி அணிந்து சென்றதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர்
வேலூர் செல்லியம்மன் கோவில் வளாகத்துக்குள் காலணி அணிந்து சென்றதை கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட இந்துசமய அறநிலையத்துறையின் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா வேலூர் செல்லியம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற சிலர் காலணி அணிந்தபடி கோவில் வளாகத்துக்குள் வந்தனர். இந்த சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவில் வளாகத்தில் காலணி அணிந்தபடி நடமாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை கண்டித்து வேலூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் செல்லியம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மனோகரன், கோட்ட பொருளாளர் பாஸ்கரன், செயலாளர் ரவி, வேலூர் மாநகர செயலாளர் ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முற்றுகை
ஆர்ப்பாட்டத்தில், செல்லியம்மன் கோவில் வளாகத்துக்குள் கோவிலுக்குள் காலணி அணிந்து சென்றவர்களையும், அதனை தடுக்காத அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு ஆகியோரை கண்டித்தும், கோவிலில் இருந்து இந்துசமய அறநிலைய துறையினர் வெளியேற வேண்டும். செல்லியம்மன் கோவில் செயல் அலுவலரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி வாங்க பார்க்கிறார்கள். அதனை கைவிட வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
ஆர்பாட்டத்துக்கு பின்னர் இந்து முன்னணி நிர்வாகிகள் கோவில் வளாகத்துக்குள் காலணி அணிந்து வந்தது தொடர்பாக செல்லியம்மன் கோவில் செயல் அலுவலரிடம் மனு அளிக்க சென்றனர். அங்கு செயல் அலுவலர் இல்லாததால் அவருடைய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தோட்டப்பாளையம் நாராயணி ரெட்டிசத்திரம் கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு அங்கு வந்து இந்து முன்னணியினரிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.