தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை

கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் ஓசூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-05-16 07:00 GMT
ஓசூர்:
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் ஓசூர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் ஓசூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணை மற்றும் கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று அணைக்கு வினாடிக்கு 504 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகேயுள்ள தட்டனப்பள்ளி, பெத்தகுள்ளு, முத்தாலி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நேற்று வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ ஆற்றில் இறங்கக்கூடாது. 
ரசாயன நுரை 
மேலும் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ஆற்றை கடக்க கூடாது என்று அறிவுறுத்தினர். இதனிடையே, தென்பெண்ணை ஆற்றில் வெளியேறும் தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து நுரைப்பொங்கி வருகிறது. தொடர்ந்து 6 நாட்களாக ஆற்றில் ரசாயன நுரை மலைபோல் குவிந்து காட்சி அளிக்கிறது. மேலும் துர்நாற்றமும் வீசி வருகிறது. ரசாயன கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்