காவேரிப்பட்டணம் அருகே நெடுங்கல் தடுப்பணை மதகுகளில் நீர்கசிவு விவசாயிகள் கவலை

காவேரிப்பட்டணம் அருகே நெடுங்கல் தடுப்பணை மதகுகளில் நீர்கசிவு ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

Update: 2022-05-16 06:57 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுங்கல் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் திறந்து விடப்படும் உபரிநீர் நெடுங்கல், காவேரிப்பட்டணம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்யும் மழை இந்த தடுப்பணைக்கு நீர் ஆதாரமாக உள்ளது. இந்த தடுப்பணை மூலம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறும். மேலும் தடுப்பணை நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக பாரூர் ஏரிக்கும், மழைகாலங்களில் உபரிநீர் பெனுகொண்டாபுரத்தில் இருந்து கல்லாவி வழியாக ஊத்தங்கரைக்கும், மற்றொரு கால்வாய் வழியாக பாம்பாறு அணைக்கு இணைப்பும் கொடுக்கப்பட்டு 5 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 134 ஆண்டு பழமை வாய்ந்த இந்த தடுப்பணையின் மதகுகளை மாற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 
இதையடுத்து புதிய மதகு அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. பணி தாமதமாக நடைபெறுவதால் தடுப்பணையின் மதகுகள் சிதிலமடைந்து நீர் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வருகிறது. மேலும் மதகுகள் துருப்பிடித்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்போது தொடர் மழை பெய்து வருவதாலும், கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும் உடனடியாக மதகுகளை மாற்ற முடியவில்லை. இன்னும், 15 நாட்களில் புதிய மதகு மாற்றும் பணி தொடங்கும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்