வியாபாரியை கத்தியால் கிழித்து ரூ.2 லட்சம் பறித்த 3 பேர் கைது
வியாபாரியை கத்தியால் கிழித்து ரூ.2 லட்சம் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி:
வியாபாரியிடம் பணம் பறிப்பு
திருச்சி பீமநகர் கீழகொசத்தெருவை சேர்ந்தவர் பக்ருதீன்(வயது 39). இவர் கார் வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லையில் ஒரு காரை விற்ற வகையில் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்றார். அதில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்தினார். மீதி பணம் ரூ.2 லட்சத்துடன் நெல்லையில் இருந்து பஸ் ஏறி திருச்சி மன்னார்புரம் வந்து இறங்கினார்.
அங்கிருந்து திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 வாலிபர்கள் பக்ருதீனை கத்தியால் கையில் கிழித்து அவரிடம் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
3 பேர் கைது
இதுகுறித்து பக்ருதீன் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்துடன் தப்பி சென்ற 3 வாலிபர்களை தேடி வந்தனர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் சந்தேகப்படும்படி அங்கு 3 வாலிபர்கள் சுற்றியது தெரியவந்தது. இதையடுத்து 3 வாலிபர்களையும் நேற்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், திருச்சி பீமநகர் கூனிபஜாரை சேர்ந்த ஜோஸ்வா என்ற ராஜேஷ்குமார்(20), திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்த ஆதம்(22), பிரசாந்த்(22) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் தான் பணத்தை பறித்து சென்றனர் என்பதும், அந்த பணத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர்.