8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் செல்போன் உபயோகித்ததை பெற்றோர் கண்டித்ததால் வேதனை அடைந்த 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-15 21:54 GMT
கோவை

கோவையில் செல்போன் உபயோகித்ததை பெற்றோர் கண்டித்ததால் வேதனை அடைந்த 8-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

8-ம் வகுப்பு மாணவி

தேனியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). இவர் தனது குடும்பத்துடன் கோவையை அடுத்த பி.என்.புதூர் நேதாஜி வீதியில் தங்கி இருந்து பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜோதி (38), கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகள் தாரணி (14).

 இவர் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
கொரோனா பரவல் காலத்தில் ஆன்லைன் வகுப்பு நடந்து வந்ததால் தாரணிக்கு பெற்றோர் செல்போன் வாங்கி கொடுத்தனர். 

அதில் அவர் பாடம் படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால் தாரணி பள்ளிக்கு செல்ல தொடங்கினார்.

தூக்குப்போட்டு தற்கொலை

செல்வகுமாரும், ஜோதியும் தினமும் காலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில்தான் வீடு திரும்புவது வழக்கம். தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டதால் தாரணி எப்போதுமே செல்போன் பார்த்து வந்ததாக தெரிகிறது. அதை பெற்றோர் கண்டித்ததுடன் அவருக்கு தக்க அறிவுரை வழங்கினார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் 2 பேரும் வேலைக்கு சென்றபோது, அவர்கள் தனது மகளிடம் இருந்து செல்போனை வாங்கி வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த தாரணி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

மாலையில் வேலை முடிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் திறக்கப்படாததால் அக்கம்,பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்கு தாரணி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 செல்போன் உபயோகித்ததை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்