கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் சுகாதார மேளா; மந்திரி சுதாகர் தகவல்
கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் சுகாதார மேளா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சுகாதார மேளா
சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் 2 நாட்கள் சுகாதார மேளா நேற்று முன்தினம் தொடங்கியது. ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக இந்த மேளா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் இந்த மேளாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஒரே இடத்தில் மருத்துவ பரிசோதனை, நோயாளிகளுக்கு சிகிச்சை, மருந்து வழங்குதல் உள்ளிட்டவை சுகாதார மேளாவில் இடம் பெற்றிருந்தது.
சிக்பள்ளாப்பூர் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஏராளமான மக்கள் வந்து மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் பெற்று சென்றார்கள். நேற்று 2-வது நாளாக நடைபெற்ற சுகாதார மேளாவை பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண் சிங் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
சாத்தியமில்லை
சிக்பள்ளாப்பூரில் நடைபெற்று வரும் சுகாதார மேளாவில் ஆயிரக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரே இடத்தில் மருத்துவ பரிசோதனை, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, மருந்துகளும் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்காக இலவச பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த சுகாதார மேளாவை பிரதமர், மத்திய மந்திரிகளும் பாராட்டி உள்ளனர்.
ஒரே இடத்தில் இவை அனைத்தும் இலவசமாக கிடைக்க சாத்தியமில்லை. சிக்பள்ளாப்பூரில் நடைபெற்ற சுகாதார மேளா போன்று வேறு எங்கும் இந்த அளவுக்கு நடைபெற சாத்தியமில்லை. இந்த சுகாதார மேளா நாட்டுக்கே முன் மாதிரியாக அமைந்துள்ளது. இதற்காக மந்திரி சுதாகரை பாராட்டுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டந்தோறும்...
இதுபற்றி சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், சிக்பள்ளாப்பூரில் நடைபெற்ற 2 நாட்கள் சுகாதார மேளாவில் ஆயிரக்கணக்கான ஏழை மக்கள் இலவச மருத்துவ வசதி பெற்று பயன் அடைந்துள்ளனர். 2 நாட்கள் நடைபெற்ற மேளா எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.
இதுபோன்று, கர்நாடகத்தில் மாவட்டந்தோறும் சுகாதார மேளா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையுடன் ஆலோசித்து விட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.