நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார்
சிவகாசியில் நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகாசி,
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது 48). இவர் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி செயலாளராக உள்ளார். நேற்று இரவு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து நண்பர்கள் எட்வின் நோவா, மதுரைவீரன் ஆகியோருடன் சிவகாசியில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரை சந்திக்க காரில் வந்துள்ளார். காரை மதுரைவீரன் ஓட்டி வந்தார். சிவகாசியில் உள்ள கட்சி பிரமுகரை சந்தித்துவிட்டு அரசு மருத்துவமனை வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் திரும்பிக்கொண்டிருந்தனர். இரவு 8.45 மணிக்கு அரசு மருத்துவமனையை கடந்து சென்ற காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மதுரை வீரன் காரை நிறுத்திவிட்டு முன்பக்கம் சென்று பார்த்தபோது காரிலிருந்து தீப்பற்றி எரிந்தது. இதை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் கார் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்தனர். இதில் யாருக்கும் காயமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.