திண்டுக்கல் அருகே இருதரப்பினர் மோதல்; மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிப்பு

திண்டுக்கல் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

Update: 2022-05-15 19:30 GMT
தாடிக்கொம்பு:
திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், காந்திநகர் காலனி பகுதியில் உள்ள மைதானத்தில் நேற்றிரவு மது அருந்தினர். அதேபோல் காந்திநகர் காலனியை சேர்ந்த சிலரும் அங்கு நின்றிருந்தனர். அப்போது செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர்கள் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது.
இதனை பார்த்த காந்திநகர் காலனியை சேர்ந்த இளைஞர்கள், அவர்களை விலக்கிவிட்டனர். ஆனால் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த இளைஞர்கள், இதை கேட்க நீங்கள் யார்? என்று கேட்டு காந்திநகர் காலனியை சேர்ந்தவர்களிடம் தகராறு செய்தனர். இந்த தகராறு இருதரப்பினர் மோதலாக உருவானது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த செட்டிநாயக்கன்பட்டிைய சேர்ந்த இளைஞர்கள், காந்திநகர் காலனிக்குள் புகுந்து 2 கடைகளை அடித்து நொறுக்கினர். அதேபோல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த 2 பேரின் மோட்டார் சைக்கிள்களை காந்திநகர் காலனியை சேர்ந்த இளைஞர்கள் தீவைத்து எரித்தனர். இதனால் செட்டிநாயக்கன்பட்டி மற்றும் காந்திநகர் காலனியில் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 பகுதிகளிலும் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்