பல்வேறு துறைகளின் சார்பில் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மானாமதுரை,
மக்கள் தொடர்பு முகாமில் பல்வேறு துறைகளின் சார்பில் 135 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
மக்கள் தொடர்பு முகாம்
மானாமதுரை அருகே குவளைவேலி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடந்தது. மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் முன்னிலை வகித்தார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பேசியதாவது:- பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில், குவளைவேலி கிராமத்தில் வருவாய் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைக்கிணங்க புதிய பால் உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கம் நிறுவுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், மின்மாற்றி, சாலை வசதி, பஸ்வசதி, கழிப்பிட வசதி போன்றவைகளை ஏற்படுத்தவும், மின் மயானச்சாலை சீரமைப்பிற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
கோரிக்கை
மேலும், பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் மனுக்களாக அளிக்க லாம். பல்வேறு திட்டங்களை பெறுவதற்கு எந்ததுறையை அணுக வேண்டும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொண்டு, அந்த துறையை முறையாக அணுகி பயன்பெற வேண்டும். தகுதி உடைய நபர்களுக்கு உரிய பயன்கள் உடனடியாக கிடைக்கப் பெறும் வகையில், வெளிப்படைத்தன்மையாக நிர்வாகம் தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் இந்த மக்கள் தொடர்பு முகாமின் மூலம் விரிவாக எடுத்துரைத்து உள்ளனர்.
நலத்திட்ட உதவி
இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற்று, தங்களின் வாழ்வா தாரத்தை பொதுமக்கள் மேம்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிகழ்ச்சியில் மொத்தம் 135 பயனாளிகளுக்கு ரூ.16.44 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கினார்.
முன்னதாக, வேளாண்மைத்துறை, பொது சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்துறை ஆகிய துறைகள் மூலம் பொதுமக்கள் பார்த்து எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாத்துரை, ஊராட்சி தலைவர் ரவி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை மானாமதுரை தாசில்தார் தமிழரசன் மற்றும் அரசு அலுவலர்கள் செய்திருந்தனர்.