தி.மு.க. அரசின் ஓராண்டு ஆட்சியில் 60 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்; சுப.வீரபாண்டியன் பேச்சு

தி.மு.க. அரசின் ஓராண்டு ஆட்சியில் 60 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக சுப.வீரபாண்டியன் பேசினார்.

Update: 2022-05-15 19:12 GMT
நெல்லை:
தி.மு.க. அரசின் ஓராண்டு ஆட்சியில் 60 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக சுப.வீரபாண்டியன் பேசினார்.

தி.மு.க. பொதுக்கூட்டம்

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில், தி.மு.க. அரசின் நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில்  நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளர் பலராமன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் வரவேற்று பேசினார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. பேசினார். திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

60 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றம்

கடந்த 10 ஆண்டு காலம் ஆட்சி செய்துவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பில் இருந்து விலகிய போது ரூ.5 லட்சம் கோடி கடன், கொரோனா உச்சம் என இக்கட்டான சூழ்நிலையில் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அனைத்து இன்னல்களையும் திறம்பட எதிர்கொண்டு வெற்றி பெற்றார்.
திமுக.வின் ஓராண்டு கால ஆட்சியில் கொரோனா உச்சம் குறைந்துள்ளது. கஜானா வளர்ச்சி அடைந்துள்ளது. அதோடு மட்டுமல்லாமல் 5 ஆண்டு காலத்தில் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதியில் ஓராண்டில் 10 சதவீதம் நிறைவேற்றினாலே போதுமானது. ஆனால் ஓராண்டில் 60 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதுவே தி.மு.க. அரசின் சாதனை ஆகும்.

வளர்ந்து வரும் தமிழகம்

தமிழகம் வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது. தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அதிகமாக பள்ளி கல்வித்துறைக்கு ரூ.37 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது அடுத்த தலைமுறையின் வளர்ச்சிக்காகத்தான்.
இலங்கைக்கு உதவி
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் மக்களுக்கு தமிழகத்தில் இருந்து ரூ.180 கோடி மதிப்பில் உணவுப்பொருட்கள், மருந்துகள் அனுப்பப்படுகிறது. இதுவே தமிழகத்தின் வளர்ச்சிதான். தி.மு.க. ஆட்சிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் அண்ணாமலை போன்றோர் தொடர்ந்து பேசிவந்தால், மக்கள் எழுச்சியை அவர்கள் சந்திக்க நேரிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி மண்டல தலைவர்கள் மகேசுவரி, ரேவதி பிரபு, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், கவுன்சிலர்கள் ஜெகநாதன், பவுல்ராஜ், பேச்சியம்மாள், வில்சன் மணித்துரை, துணை அமைப்பாளர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்