கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-05-15 17:25 GMT
கடலூர், 

அக்கினி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. நேற்றும் பகலில் வெயில் சுள்ளென சுட்டெரித்தது. இதனால் பாதசாரிகள் கையில் குடைபிடித்துக்கொண்டும், தலையில் தொப்பி அணிந்தும், ஈரமான துணிகளை தலையில் போர்த்திக்கொண்டும் சென்றதை காண முடிந்தது.
மழை பெய்தால்தான் வெப்பம் தணியும் என்ற நிலை உள்ளதால் பொதுமக்கள் வருணபகவானை வேண்டி மழைக்காக காத்திருந்திருந்தனர்.
கடலூரில் நேற்று இரவு 8 மணியளவில் திடீரென மழைபெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பொழிந்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இடி-மின்னலுடன் மழை

அதேபோல் பண்ருட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை6.45 மணிக்கு பலத்த காற்று வீசியது. பின்னர் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும் அதிகரித்து பலத்த மழையாக கொட்டித்தீர்த்தது. 
இதனால் கடலூர்-பண்ருட்டி, விக்கிராவண்டி-கும்பகோணம் உள்ளிட்ட நகரின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கி நின்றது. இரவு 6.45 மணி முதல் 7.45 மணிவரை சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சிதம்பரத்தில்...

சிதம்பரம் பகுதியிலும் நேற்று இரவு 7 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. சிதம்பரம் நகரின் 4 வீதிகளிலும் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. திடீரென பெய்த மழையால் பாதசாரிகளும், வாகனஓட்டிகளும் மழையில் நனைய வேண்டிய நிலை உருவானது. 
இது தவிர வடலூர், நெய்வேலி, விருத்தாசலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மற்றும் மிதமான மழை பெய்து. வடலூர் பகுதியில் அறுவடை செய்து திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த எள் பயிர்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்