மகா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தோகைமலை,
வைகாசி திருவிழா
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள வெள்ளப்பட்டியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.
ஆனால் இந்தாண்டு திருவிழா கடந்த 8-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திரளான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம் எடுத்து ஊர்வலமாக குறிச்சி நகரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் பகவதி அம்மனுக்கு தீர்த்தம் மூலம் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து அங்கிருந்து மகா மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, அலகு குத்தி கொண்டும், பறவை காவடி, கரும்பு தொட்டி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். பின்னர் மகா மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.
நேர்த்திக்கடன்
தொடர்ந்து மகா மாரியம்மன் கோவில் முன்பு தயாராக வைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் ஒவ்வொரு வராக பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அப்போது பக்தர்கள் ஓம் சக்தி, பரா சக்தி என்று கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம், நீர் மோர், பாகனம் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை தோகைமலை போலீசார் செய்திருந்தனர். இதைத்தொடர்ந்து இரவு தோகைமலையில் உள்ள அடிவார கருப்பர் கோவிலில் குட்டிகுடித்தல் நிகழ்ச்சி நடந்தது.