உடுமலை மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம்
உடுமலை மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம்
தளி:
உடுமலை மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வாகனங்களை கவனமாக இயக்குமாறு வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வனவிலங்குகள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, செந்நாய், காட்டெருமை, மலைப்பாம்பு, கருமந்தி, சிங்கவால்குரங்கு உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
அதுதவிர அரிய வகை உயிரினங்களும் மூலிகைகள், தாவரங்கள் வனப்பகுதியில் வளர்ந்து வருகிறது. வனவிலங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் இருப்பிடத்தை மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதிகள் பூர்த்தி செய்து தருகிறது. ஆனால் கோடை காலங்களில் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்வதுடன் நீர்வரத்து இழந்து விடுகிறது.
அடிவாரத்தில் தஞ்சம்
இதனால் வனவிலங்குகள் உணவு தேவையை பூர்த்தி செய்திருந்தாலும் கூட தாகம் தீர்ப்பதற்கு அடிவாரப்பகுதிக்கு வரவேண்டி உள்ளது.இந்த சூழலில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. ஆறுகளும் முற்றிலுமாக நீர்வரத்தை இழந்துவிட்டன. அதைத்தொடர்ந்து யானை, மான், காட்டெருமை, கருமந்தி, சிங்கவால் குரங்குகள் தாகம் தீர்ப்பதற்காக அமராவதி அணையை நோக்கி வந்த வண்ணம் உள்ளன. மேலும் அவை உடுமலை-மூணாறு சாலையில் விளையாடி மகிழ்ந்த வண்ணமும் உள்ளது.
அத்துடன் வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்குள்ள மரங்களில் தஞ்சம் அடைந்து உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அடிவாரப் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே உடுமலை-மூணாறு சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையைக்கடக்கும் வரையில் பொறுமை காத்து செல்ல வேண்டும். வனவிலங்குகளை துன்புறுத்துதோ அவை மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் வாகனஓட்டிகள் ஈடுபடக்கூடாதென வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளன