தண்ணீர் என நினைத்து மண்எண்ணெய் குடித்த மூதாட்டி சாவு
திருவள்ளூர் அருகே தண்ணீர் என நினைத்து மண்எண்ணெய் குடித்த மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் தொடுகாடு நமச்சிவாயபுரம் கிருஷ்ணர் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மங்கம்மாள் (வயது 72). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த 12-ந் தேதி அன்று வீட்டில் இருந்த மங்கம்மாள் தண்ணீர் குடிக்க சென்றார். அப்போது தண்ணீர் என்று நினைத்து அருகில் இருந்த மண்எண்ணெய்யை தவறுதலாக எடுத்து குடித்ததாக தெரிகிறது.
இதில் மயங்கி விழுந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக உடனடியாக சுங்குவாச் சத்திரம் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.